VALASARAWAKKAM UPHC-SCHOOL NGO

பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர சமுதாய நல மையத்தில் இன்று (13.06.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியா அவர்களிடம் பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு
ரூ.30 இலட்சம் மதிப்பிலான‌ மருத்துவ சேவை பயன்பாட்டிற்கான உபகரணங்களை ஸ்கூல் (SCHOOL) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது :

பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவ சேவைகள் துறையின் சார்பில் 140 நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையங்கள் (UPHC), 16 நகர்ப்புர சமுதாய நல மையங்கள் (UCHC), 140 நகர்ப்புர நல வாழ்வு மையங்கள் (HWC) மற்றும் 3 அவசரகால மகப்பேறு மருத்துவமனைகள் (EOC) என 299 மாநகராட்சி மருத்துவமனைகள் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியையும், சுகாதாரத்தையும் இரு கண்களாக நினைத்து பல்வேறு  சிறப்பான திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து, பிற மாநிலங்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

சென்னை மாநகர மக்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியால் அளிக்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் சமுதாயத்தின் விளிம்பு நிலையிலுள்ள ஏழை மக்கள் பயனடைந்து வரும் சூழ்நிலையில், மணலி, தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு மருத்துவ மண்டலங்களுக்குட்பட்ட நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் நகர்ப்புர சமுதாய நலவாழ்வு மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 12.47 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், ஸ்கூல் என்கிற (SCHOOL-Society of Community Health Oriented Operational Links தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூ.30 இலட்சம் மதிப்பிலான மருத்துவக் கருவிகள் மற்றும் தளவாடப் பொருட்கள் (10 POCT Fetal Doppler, 10 Oxygen Hood, 10 Radient Warmer, 10 Photography Machines, 10 Examination Mobile Spot Light, 10 Hemoglobin Meter, 5 Labour Table SS With Cushion, 5 Examination, 50 Vaccine Carrier, 200 Ice Pack for Vaccine Carrier, 25 ILR, 25 Deep Freezer) இன்று வழங்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை  மாநகராட்சியில் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது.  இந்தப் பணி இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்படும். இந்தக் கணக்கெடுப்புகள் முடிவடைந்தவுடன், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துடன் இணைந்து தெருநாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் என்னென்ன வழிமுறைகள் மேற்கொள்ளலாம் என முடிவெடுக்கப்படும்.

வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு அதன் உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளம் மூலமாக ரூ.50 செலுத்தி அதற்கான உரிமத்தினை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.  செல்லப் பிராணிகளுக்கான உரிமம் இந்த ஆண்டு 5 ஆயிரத்திற்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் தங்களுடைய செல்லப்பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்  திரு.கா.கணபதி, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, மண்டலக்குழுத்  தலைவர் திரு.நொளம்பூர் வே.ராஜன், ஸ்கூல் (SCHOOL) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் பெனாசிர் பட்டில் (Dr. Benazir Patil), இயக்குநர் டாக்டர் ராகுல் சிங் படௌரியா (Dr. Rahul Singh Bhadauria), திரு.விஷ்வநாத், மாமன்ற உறுப்பினர்கள் திரு.வ. செல்வக்குமார், திரு.ச. சங்கர் கணேஷ், திரு.வி. கிரிதரன், திருமதி ச. பாரதி, திரு.க. ராஜு, திருமதி க. ஹேமலதா, திருமதி சாந்தி ராமலிங்கம்,
திருமதி ர. செல்வி ரமேஷ், திருமதி. மா. ரமணி மாதவன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.பானுமதி, மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு : இணை இயக்குநர்/மக்கள் தொடர்பு அலுவலர்,

                            பெருநகர சென்னை மாநகராட்சி

X